Wednesday, October 5, 2011

இயற்பியலுக்கான நோபெல் பரிசு அறிவிப்பு

நொபெல் பரிசு பெறும் மூவர்
நொபெல் பரிசு பெறும் மூவர் 

யுனிவர்ஸ் என்கிற பேரண்டமானது தொடர்ந்து விரிவடைந்துவருகிறது என்கிற கண்டுபிடிப்புக்கு பின்னணியில் இருந்த மூன்று விஞ்ஞானிகளுக்கு இந்த ஆண்டுக்கான இயற்பியல் துறைக்கான நோபெல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவைச்சேர்ந்த சால் பெர்ல்முட்டர் மற்றும் அடம் ரிஸ் மற்றும் ஆஸ்திரேலியாவைச்சேர்ந்த பிரைன் ஷமிட் ஆகிய மூன்று பேருக்கும் கூட்டாக இந்த பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த மூன்றுபேரும் 1a சூப்பர்நோவா என்கிற நட்சத்திர பெருவெடிப்பு தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டனர். அதன் முடிவில், இந்த பேரண்டமானது தொடர்ந்து விரிவடைந்துகொண்டிருப்பது மட்டுமல்ல, அதன் வேகமும் தொடர்ந்து அதிகரித்தபடியே இருக்கிறது என்கிற முடிவை அறிவித்தனர்.

பேராசிரியர் பெர்ல்முட்டர் அவர்கள் 1988 ஆம் ஆண்டு தனது ஆய்வை துவக்கினார். மற்ற இரு பேராசிரியர்கள் இணைந்து தங்களின் ஆய்வை 1994 ஆம் ஆண்டு துவக்கினார்கள்.

இந்த இரண்டு குழுக்களும் தனித்தனியாக 1ஏ என்கிற வகையை சேர்ந்த அடத்தி மிக்க நட்சத்திரத்தின் பெருவெடிப்பை ஆராய்ந்தார்கள்.

இவர்கள் ஆய்வு செய்த இரண்டு நட்சத்திரங்களின் பெருவெடிப்பின் அளவும் ஏறக்குறைய ஒரே அளவாக இருந்ததால், இந்த பெருவெடிப்பின்போது அவை வெளிப்படுத்திய ஒளியின் அளவும் ஒரே அளவாக தெரிந்தது. அதுமட்டுமல்ல பூமியிலிருந்து இந்த குறிப்பிட்ட ரக நட்சத்திரங்கள் இருந்த தொலைவும் ஏறக்குறைய ஒரே அளவாக இருந்ததையும் இது உறுதிப்படுத்தியது.

நேர்மாறான முடிவுகள்

விண்வெளியில் சுற்றும் ஆண்ட்ராய்ட் என்ற அண்டம்
விண்வெளியில் சுற்றும் ஆண்ட்ராய்ட் என்ற அண்டம்

இவர்கள் தங்களின் ஆய்வைதுவக்கியபோது, அருகில் இருக்கும் நட்சத்திரங்களை விட பேரண்டத்தின் தொலைவில் இருக்கும் நட்சத்திரங்களின் செயற்படுவேகம் குறைவாக இருக்கும் என்றுதான் நினைத்தார்கள். காரணம் பேரண்டம் என்பது ஒரு பெரு வெடிப்பிலிருந்து தோன்றியது என்கிற கொள்கையின்படி, அந்த பெருவெடிப்பின்போது வெளிப்பட்ட சக்தியின் அளவு, தொலைவு அதிகரிக்க அதிகரிக்க குறையும் என்று அவர்கள் நினைத்திருந்தார்கள்.

ஆனால் இவர்கள் எதிர்பார்த்ததற்கு நேர் மாறாக, தொலைதூரத்தில் இருக்கும் சூப்பர்நோவா ரக நட்சத்திரங்களின் செயற்படுவேகமானது தொடர்ந்து அதிகரித்தபடி இருந்ததை இவர்களின் பரிசோதனை முடிவுகள் காட்டின. அதன் அடிப்படையில். பேரண்டமானது தொடர்ந்து விரிவடைந்துகொண்டிருக்கிறது என்று இவர்கள் முடிவுக்கு வந்தார்கள்.

இவர்களின் இந்த ஆய்வின் முடிவுகள் ஒருபக்கம் பேரண்டத்தின் துவக்கம் தொடர்பான தற்போதைய புரிதலுக்கு அடிப்படையாக அமைந்தாலும், பல கடினமான கேள்விகளையும் எழுப்புகிறது.

உதாரணமாக இந்த பேரண்டத்தின் தொடர் விரிவாக்கத்தை விளக்குவதற்கு இவர்கள் டார்க் எனர்ஜி என்கிற மர்ம சக்தி ஒன்று இருப்பதாக தெரிவிக்கிறார்கள். இந்த மர்ம சக்தி எதனால் ஆனது, அதன் இயல்பு என்ன என்பதெல்லாம் தொடர்ந்து புதிராகவே இருந்தாலும், இவர்களின் பெரும்பான்மை கருத்துப்படி, பேரண்டத்தின் முக்கால் பகுதி இந்த மர்ம சக்தியால் ஆனது.

அதேசமயதில், இந்த பேரண்டப்பெருவெளியில் ஈர்ப்பு சக்தி இருக்கிறதா என்கிற கேள்விக்கு அவர்களால் தெளிவான விளக்கத்தை தர முடியவில்லை. அதாவது, பேரண்டத்தில் இருக்கும் கேலக்ஸிகள் எனப்படும் அண்டங்கள் ஒன்றிலிருந்து ஒன்று விலகி ஓடாமல் இருப்பதற்கு பேரண்டப்பெருவெளியில் நிலவும் ஈர்ப்புசக்திதான் காரணம் என்பது ஒரு கருத்து. அப்படியானால் அந்த ஈர்ப்பு சக்தி என்பது என்ன, அதன் செயற்படும் தன்மை என்ன என்கிற கேள்விகள் எழுகின்றன. அதற்கான உறுதியான விடைகள் கிடைக்கவில்லை. ஏதோ ஒருவித திடவஸ்து இந்த அண்டங்களை பிணைத்து வைத்திருக்கிறது என்பது ஒரு கருத்து. அப்படியானால் அந்த திடவஸ்து என்ன என்கிற புதிய கேள்வி எழுகிறது.

இப்படியாக, பேரண்டம் தொடர்பான புதிய புரிதலுக்கும், விடை தெரியாத கேள்விகளுக்கும் வழிவகுத்திருக்கும் இந்த மூவருக்கும் தான் இந்த ஆண்டுக்கான இயற்பியல்துறைக்கான நோபெல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

*************************************************************************************

No comments:

Post a Comment