Saturday, July 13, 2013

மூலாதாரங்களின் ஆதாரம் எது?

இஸ்லாமிய சமுதாயம் சந்தித்துள்ள பிரச்சினைகளில் எல்லாம் தலையாய,  தலைகுனிய வேண்டிய பிரச்சினைதான் மார்க்கத்தின் அடிப்படை மூலாதாரம் எது என்ற விடயத்தில் முரண்பட்டு நிற்பது. 

ஏனைய மதங்கள் அசத்தியம் என்றாலும் அவர்கள் தமது மூலாதாரம் எது என்பதில் பெரிய அளவு சர்ச்சை செய்ததில்லை. 

யூதர்களிடம் அவர்களின் மூலாதாரம் எது என்று கேட்டுப் பாருங்கள். எழுத்து வடிவமான "தனக்" என்பதுடன் அதன் விளக்கமான வாய் வழி "தல்முத்" இணைந்த "தோரா" என்று அனைத்து யூதர்களும் சொல்வார்கள். 

இந்து மதத்தைப் பொருத்தவரை அவர்கள் மூலாதாரங்களாக வேதா, மந்திரம், ஆகமம், பூரணா,இதிகாசம் என்பவற்றை ஏற்றுக்கொண்டுள்ளனர். 

கிறித்தவர்களைப் பொருத்தவரை எது பைபிள் என்பதில் கருத்துவேறுபாடு பட்டாலும் பைபிள் தமது மூலாதாரம் என்பதில் கருத்துவேறுபாடு பட்டதில்லை.  
புத்தர்களைப் பொருத்தவரை அவர்கள் திரிபீடகத்தை மூலாதாரமாகக் கொண்டுள்ளனர். 

சீக்கியர்கள் குருநானக் எழுதிய குரு கிரந்த் சாஹிப் எனும் ஆதி கிரந்தத்தையும், ஜைனர்கள் ஆகமங்களையும்,சூத்திரங்களையும், டவோயிசத்தைப் பின்பற்றும் ஜப்பானியர்கள் டவோ டீ சிங் இனையும்,சோரோஅஸ்த்ரியர்கள் அவெஸ்டா வினையும் தமது மூலாதாரங்களாகக்  கொண்டுள்ளனர். 

முஸ்லிம்களின் மூலாதாரம் எது என்று கேட்டுப்பார்த்தால் உலகில் உள்ள மதப்பிரிவுகளை விட மூலாதாரங்களில் முஸ்லிம்கள் பிரிந்து கிடப்பது அதிகமே. குர்ஆன்  மட்டும் மூலாதாரம் என்று ஒரு பிரிவு சொல்கிறது. குர்ஆனும் ஹதீசும் என்று ஒரு கூட்டம் சொல்கிறது. ஹதீஸ் என்று என்ன இருந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒரு கூட்டம் சொல்கிறது. தமக்குப் பிடிக்காத சஹாபாக்கள் அறிவித்த அனைத்து ஹதீஸ்களையும் ஏற்கக் கூடாது என்று ஒரு கூட்டம் சொல்கிறது. சரியான அறிவிப்பாளரைக் கொண்ட ஹதீசும், குர்ஆனும் என்று ஒரு கூட்டம் சொல்கிறது.

அறிவிப்பாளர் சரியான, குர்ஆனுக்கு முரண்படாத   ஹதீசும், குர்ஆனும் என்று ஒரு கூட்டம் சொல்கிறது. குர்ஆன் ஹதீஸோடு சஹாபாக்களும் - ஸலபுஸ்ஸாலிஹீன்கள் – புகஹாக்கள்என்று ஒன்றுக்கு மேற்பட்ட கூட்டம் சொல்கின்றன. இவற்றோடு இஜ்மா, கியாசை சேர்க்கவேண்டும் என்று இன்னொரு கூட்டம் சொல்கிறது. மதுஹபுகளையும் இவற்றோடு சேர்க்க வேண்டும் என்று ஒரு கூட்டம் சொல்கிறது. தரீக்காக்களையும் சேர்க்கவேண்டும் என்று ஒரு கூட்டம் சொல்கிறது. 

நவீன கால அறிஞர்கள், உலமாக்கள், பெரியோர்கள், இமாம்கள், ஊர்த் தலைவர்கள், பேஷ் இமாம் என்று பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. மூலாதாரங்களைக் கண்டுபிடிப்பது என்பது மார்க்கத்தில் அவ்வளவு கடினமா? கொள்கைக் குழப்பங்கள் அனைத்துக்கும், அநேகமான கருத்து வேறுபாடுகளுக்கும் இப்பிரச்சினை காரணமாக அமைவதால் இதற்கு ஒரு முடிவு கட்டியே ஆகவேண்டும் என்ற நோக்கத்தில் இத்தொடர் அமைய இருக்கிறது. இயன்றவரை மனிதனின் சாதாரண அறிவு ஒத்துக்கொள்ளும் வகையில் தர்க்கரீதியாகவும், ஆதாரங்களோடும் இத்தொடர் அமைய இருக்கிறது இன்ஷா அல்லா.  

உலக வெற்றியின் மூலாதாரம் எது?

சுயசிந்தனை, சுயபுத்தி, சுய ஆராய்ச்சி போன்ற சொற்கள் மனிதனைப் பொருத்தவரை புத்தி ஜீவிகளைச் சுத்தி ஜீவிக்கின்றமை நாம் அறிந்ததே!  காப்பியடித்தல், சொல்புத்தி, அச்சுச் சிந்தனை போன்ற சொற்கள் தம்மீது கவளமும் விழாமல் கவனமாய் இருப்பவர்கள் படைப்பாற்றல் மிக்கவர்கள் என்றுபாராட்டப்படுகின்றனர்.

மனித வரலாற்றில் எந்த மனிதரும் சொல்லியிராத ஒரு கருத்தை யாராவது சொல்லி இருந்தால் அது சுய சிந்தனை என்று சொல்வது ஓரளவு சரிதான். நாம் ஓரளவு சரி என்று சொல்லக் காரணமும் உண்டு. ஏனெனில், சில வேளைகளில் சில சிந்தனைகள் சிலருக்குத் தோன்றி அச்சிந்தனையும்,சிந்தித்தவரும் வரலாற்றில் மறைக்கப்பட்டிருக்கலாம்.  இதே சிந்தனை வரலாற்றில் பிந்திய ஒருவருக்கு  முளைத்திருக்கலாம்.

இப்படி மறைக்கப்பட்ட உண்மைகள் பின்னால் வந்தஒருவரால் சொல்லப்படும்போது   கூட அதுவும் சுய சிந்தனைதான் என்று மன்னித்து விடலாம். மனிதன் என்ற படைப்பு சொல்லத்தவறிய ஒரு விடயம் யாரவது ஒரு மனிதனால் முதன் முதல் சொல்லப்படும் போது, அது மனிதனைப் பொறுத்தவரை சுய ஆராய்ச்சியே. ஆனால்....

எந்த அடிப்படையிலும் இல்லாத, மனிதன் உட்பட அண்ட சராசரத்தில் எந்த ஒன்றும் சொல்லாத  ஒரு கருத்தை இந்த மனிதன் சொந்தமாக சிந்தித்துச் சொன்னதென்று  வருமானால் அது சுத்தப் பொய்யே. மனிதர்களுக்குள் வேண்டுமானால் சிலர் கருத்துச் சொல்வதில் முந்தியிருக்கலாம். ஆனால், எந்த அடிப்படையையும் சாராது மனிதனுக்கு  சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் ஆற்றல்
உண்டு என்பதுசாத்தியமற்ற விடயமே.

கடவுளை நம்பக்கூடிய ஒருவன் எதைச் சிந்தித்தாலும் அவன் நம்பிக்கைப் படி அது கடவுளால் படைக்கப்பட்ட ஏதோ ஒரு அடிப்படைச் செய்தியில் இருந்து வருவிக்கப்பட்டதே ஆகும். கடவுளை நம்பாத ஒரு நாத்திகன் எதைச் சிந்தித்தாலும் அவன் நம்பிக்கைப் படி அது இயற்கையில் உள்ள ஏதோ ஒரு அடிப்படைச் செய்தியில் இருந்து வருவிக்கப்பட்டதே ஆகும். ஐம்புலனுக்கு எட்டும் விடயங்களை வைத்து தனது பகுத்தறிவின் முலம் சிந்தித்துப் பெறுவதே உண்மையான சிந்தனையாக இருக்கமுடியும். ஐசாக் நியுட்டன் அவர்கள் முதன் முதலில் புவியீர்ப்பு சக்தியைப் பற்றி சொன்னது நாம் அறிந்ததே. இக்கருத்தை மனிதர்களுக்குள் சொன்னவர்களில் நியுட்டன் முதலாவதாக இருந்தாலும் அவர் இதை சுயமாக சிந்தித்துச் சொல்லவில்லை. மாறாக, மேலே எறியப்பட்ட பொருட்கள் பூமியை நோக்கி விழுவதைக் கண்டபின்னரே அவருக்கு இச்சிந்தனை உதித்தது. 

புலன்களால் உணரப்படாத ஒன்றைப் பற்றி சிந்திப்பது சாத்தியமற்றது. மேலும் அது சத்தியமுமற்றது. எந்த அடிப்படையுமின்றி கற்பனையாகச் சிந்திக்க முடியாது என்பதே உண்மை. உதாரணமாக 15தலையும் ஒரு கொம்பும் வாலும் உடைய ஒரு மனிதன் ஒரு மலையை தனது விரலால் தூக்குவது போன்று ஒருவன் கற்பனை  செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம். இக்கற்பனை தலை, கொம்பு,வால், மனிதன், மலை, விரல், எண்ணிக்கை போன்ற இயற்கை அடிப்படைகளை வைத்தே புனையப்பட்டுள்ளது. இது போன்ற இயற்கைக்கு மாற்றமான எந்த ஒரு கற்பனையானாலும் அதைக் கவனமாக அவதானிக்குமிடத்து அது ஏதோ ஒரு வகையில் இயற்கையின் அடிப்படையில் இருந்து தருவிக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கும் என்ற உண்மை புலப்படும். 

மொத்தத்தில் மனிதனுக்கு சுய சிந்தனை என்று ஒன்றுமே கிடையாது. மாறாக ஏற்கெனவே உள்ள செய்திகளின் அறிவை யார் முதலில் சொல்வது என்பதே சுய சிந்தனை என்று நோக்கப்படுகின்றது.

மனிதன் தனது ஐம்புலன்களினாலும்  உணரத்தக்கவுள்ள அனைத்து புலன் அறிவுகளையும், மனிதன் சிந்திக்கத்தக்கவுள்ள அனைத்து பகுத்தறிவுகளையும் இறைவன் பல்லாண்டுகளுக்கு முன் பல்லண்டங்களாகப் படைத்துவிட்டான். அதிலிருந்து காப்பியடிக்கும் வேலையைத்தான் மனிதன்செய்கிறான். சரியாகக் காப்பியடிப்பவன் விஞ்ஞானி, அறிவாளி, சிந்தனையாளர் என்று போற்றப்படுகின்றான். தவறாக காப்பியடிப்பவன் மடையன், பைத்தியக்காரன் என்று தூற்றப்படுகின்றான்.

ஒரு விஞ்ஞானியின் கருதுகோள் உண்மையாக வேண்டும் என்றால் அது இறைவன் படைத்துள்ள இயற்கை நியதிக்கு அமைவாக நடக்கவேண்டும். கருதுகோள் ஒன்றைஉண்மைப்படுத்த நடாத்தப்படும் பரிசோதனைகள் கவனமாக அவதானிக்கப்பட்டு அவை இயற்கையின் செய்திகளுக்கு ஒத்து வருமிடத்து அக்கருதுகோள் உண்மை என்று நிறுவப்படும். இயற்கை நியதிகளுக்குப் பொருந்தாத கருதுகோள்கள் பிழை என்று ஒதுக்கப்படும். ஏராளமான விஞ்ஞானிகளின் கருதுகோள்கள் இவ்வாறுதான் சரிபார்க்கப்பட்டன. எனவே, இயற்கையின் மிகச் சரியான அறிவை கண்டுபிடிப்பதில்தான் நவீன விஞ்ஞானம் தங்கியுள்ளது எனலாம். 

இதை அல்லாஹ் குர்ஆனில் எவ்வளவு அழகாகக் கூறுகிறான் என்று பாருங்கள்.

வானங்களில் உள்ளவை, பூமியில் உள்ளவை அனைத்தையும் அவன் உங்களுக்குப் பயன்படச்செய்தான். சிந்திக்கும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.(45:13). 

"பயன்படச் செய்தல்" என்பதில் சிந்திக்கும் மக்களுக்கு என்னதான் சான்றுள்ளது? 
அல்லாஹ் கூறுவது போன்று சற்று ஆழமாக இதை சிந்தித்தால் நாம் சொல்ல வந்த உண்மை பளிச்செனப் புரியும். ஒரு பொருள் பயன்பட வேண்டும் என்று சொன்னால் அப்பொருள் பற்றிய சரியான அறிவும், செய்தியும் முழுமையாக தெரிந்திருக்க வேண்டும் என்பதே அதன் அர்த்தம்.

உதாரணமாக  பூமியில் உள்ள இரும்பு என்ற பொருளை எடுத்துப் பாருங்கள். இரும்பு பற்றிய உண்மையான செய்தி வளர வளரத்தான் அதன் பயன்பாடும் அதிகரிக்கும். வாகனம் என்றும், இயந்திரம் என்றும், ஆயுதம் என்றும் நாம் அனுபவிக்கும் அத்தனை வசதிகளும் இரும்பின் உண்மைச் செய்தியைஅறிந்ததன் காரணத்தால் ஏற்பட்டதே. அல்லாஹ், இரும்பில் என்ன என்ன செய்திகளை வைத்துள்ளான் என்ற அறிவின் ஆழத்தைப் புரிந்தால்தான் இரும்பின் பயனை ஒருவன் உச்சமாக அனுபவிக்க இயலும். 

”வெளி”, ”நேரம்” என்பவற்றின் உண்மைச் செய்திகளை அல்பர்ட் ஐன்ஸ்டைன் துல்லியமாக அறிந்ததன் விளைவுதான் அவரிடம் இருந்து வெளியான ரிலேட்டிவிட்டி தியரி ஆகும். அல்லாஹ் அருளிய "வெளி”, ”நேரம்” என்பவற்றின் இயற்கைச் செய்திகளினது சரியான அறிவுடன் இது ஒத்துப் போகும் என்றால் ஐன்ஸ்டைன் கூறியது முற்றிலும் உண்மையே. 

அல்லாஹ் இயற்கையில் எண்ணிலடங்காச் செய்திகளை கட்டளைகளாகப் பிறப்பித்துள்ளான் என்பதற்கு பின்வரும் வசனம் ஆதாரமாக இருக்கிறது. 

"எனது இறைவனின் கட்டளைகளுக்காக கடல், மையாக ஆனாலும் எனது இறைவனின் கட்டளைகள்(எழுதி) முடிவதற்கு முன் கடல் முடிந்து விடும். உதவிக்கு அது போன்றதை நாம் கொண்டு வந்தாலும் சரியே" என்று கூறுவீராக!” (18:109)

ஒவ்வொரு மனிதனுக்கும், ஒவ்வொரு ஜீவராசிக்கும், ஒவ்வொரு உயிரற்ற பொருட்களுக்கும் அல்லாஹ் இடும் கட்டளைச் செய்திகளை சரியாகப் புரிபவன்தான் ஒரு டாக்டராக, ஒருஉயிரியலாளராக, ஒரு பௌதீகவியல் விஞ்ஞானியாக ஆக முடியும். 

மனிதனின் ஒவ்வொரு உறுப்பும் எவ்வாறு இயங்க வேண்டும் என்று அல்லாஹ் ஒவ்வொரு வினாடியும் கட்டளை இட்டுக்கொண்டே இருப்பான். உதாரணமாக மனிதனின் கண்ணை எடுத்துக் கொள்வோம். ஒளியைப் பார்க்கும் போது கண் எவ்வாறு இயங்க வேண்டும். இருளில் கண் எவ்வாறு இயங்க வேண்டும். தூசி விழுந்தால் கண் எவ்வாறு இயங்க வேண்டும். தூக்கத்தின் போது கண் எவ்வாறு இயங்க வேண்டும். அருகில் பார்க்கும் போதும், தூர நோக்கும் போதும் கண் எவ்வாறு இயங்க வேண்டும் என்ற கட்டளை ஒவ்வொரு வினாடியும் அல்லாஹ்வால் பிறப்பிக்கப் பட்டுக்கொண்டே இருக்கும். இக்கட்டளைகளை துல்லியமாக அறியும் மனிதன் தான் கண் வைத்தியராக மாறுகிறான். 

இக்கருத்தை இன்னுமொரு வசனத்திலும் அல்லாஹ் அழகாகக் கூறுகிறான். 

"பூமியிலும், உங்களுக்குள்ளும் உறுதியாக நம்புவோருக்குப் பல சான்றுகள் உள்ளன. சிந்திக்க மாட்டீர்களா?" (51:20,21)

உலகில் மனிதனை அல்லாஹ் படைத்து அதில் மனிதன் தனது உலகத்தேவைகளைப் பூர்த்திசெய்து சரியாக வாழ அனைத்து அறிவுகளையும் வழங்கியுள்ளான். அல்லாஹ் அறிவித்த உலகச் செய்தியின் அடிப்படையில் எவன் ஒருவன் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறானோ அவன் உலகத் தேவைகளில் பூர்த்தியுள்ளவனாக ஆகிறான். உலகத் தேவைகளுக்கும் அல்லாஹ் செய்தி அறிவிப்பான் என்பதை பின்வரும் வசனம் தெளிவாகக் கூறுகிறது.

 "மலைகளிலும், மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்! பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு! உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்!" என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான்“ (16:68, 69)

இங்கு தேனிக்களுக்கு அல்லாஹ் செய்தி அறிவித்ததாகக் குறிப்பிடுகிறான். இச்செய்தி தேனியின் மறுமை வாழ்வு சம்பந்தப்பட்டதல்ல. மாறாக இவ்வுலகில் தேனி தன் உயிரின் நிலவுகைக்கு எவ்வாறு வாழவேண்டும் என்பது பற்றியதே. எனவே இவ்வுலகிலும் ஒரு மனிதன் தன் உயிரை நிலைபெறச் செய்து சந்தோசமாக வாழவேண்டும் என்றால் இறைவன் அறிவித்த உலகம் சம்பந்தமான செய்திகளை மிகச் சரியாகப் புரிந்துகொள்வதிலேயே இருக்கிறது. 

உலகத்தில் ஒரு விடயம் உண்மையாக வேண்டும் என்றால் அல்லாஹ் அருளிய இயற்கை நியதிப்படி சிந்திப்பதே சரியானதாகும். எந்த ஒரு அறிவாளியின் அல்லது விஞ்ஞானியின் சிந்தனையும் சரிபார்க்கப்படுவது அது அல்லாஹ் அருளிய அறிவுக்கு ஒத்து வருகிறதா? இல்லையா? என்பதில்தான். ஒரு விஞ்ஞானியின் ஆராய்ச்சியில், விதியில், கோட்பாடுகளில், கருதுகோள்களில், முடிவில் பிழை இருக்கிறது என்று கண்டுபிடிக்கப் பயன்படுத்தப்படும் ஒரே அளவுகோல் அல்லாஹ் அருளிய செய்திகள்தான். ஒரு விஞ்ஞானியின் கருத்தானது சரியா, பிழையா என்று முடிவு செய்ய இன்னொரு விஞ்ஞானியின் கருத்து ஒருபோதும் அளவுகோலாக இருக்காது. அவர் எப்பேர்பட்ட சிறந்த விஞ்ஞானியானாலும் சரியே. ஒரு மிகப்பெரும் விஞ்ஞானியின் ஆராய்ச்சியை அல்லாஹ்வின் இயற்கை நியதியோடு உரசிப்பார்க்கும் எந்தவொரு சாதாரணக் குடிமகன் கூட அவ்விஞ்ஞானியின் ஆராய்ச்சியில் குறைகாணும் தகுதி பெற்றவனே. தனது அறிவோடு அல்லது வேறு ஒரு பெரிய அறிஞரின் அறிவோடு ஒரு கருத்தை உரசிப்பார்த்து அக்கருத்து சரியா, பிழையா என்று ஆராய எந்தஅறிஞனுக்கும் இவ்வுலகில் அதிகாரம் இல்லை என்பதே சரியான கருத்தாகும். இது ஒவ்வொரு மனிதனும் ஒத்துக்கொண்டுள்ள விடயமும் கூட. 

உலகில் உள்ள பொருட்களின் அறிவு அல்லாஹ்வால் மனிதனுக்கு நேரடியாக அறிவித்துக் கொடுக்கப்பட்டுள்ளதா? என்று தேடிப்பார்த்தால் பின்வரும் வசனம் இதற்குச் சரியான பதிலாக அமைகிறது.

“அனைத்துப் பெயர்களையும் (இறைவன்) ஆதமுக்குக் கற்றுக் கொடுத்தான்“ (2:31)

ஆதம் நபி அவர்களுக்கு அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் அறிவையும் சொல்லிக்கொடுத்து உள்ளான். விஞ்ஞானிகளின் தந்தை என்று குறிப்பிடத் தகுதியான ஒருவர் இருக்கிறார் என்றால் அது ஆதம் நபியே. இன்றைய நவீன கண்டுபிடிப்புகளுக்கு எல்லாம் உள்ள ஆரம்ப மனித வித்து ஆதம்நபி போட்டது என்று சொன்னாலும் அது மிகையல்ல. 

எனவே, சுவனம் செல்லும் வழி ஒருபுறம் இருக்க மனிதன் இவ்வுலகில் வெற்றிகரமாக வாழும் வழியை சொல்லித்தரும் பொறுப்பையும் இறைவனே ஏற்றுள்ளான். ஆதம் நபியைப்படைத்து  அவருக்கு அனைத்துப் பொருட்களைப் பற்றிய அறிவையும் ஒரே தடவையில் கற்றுக் கொடுத்ததும் இங்கு கவனிக்கப்பட வேண்டியது. மனிதனையும் மனிதனுக்குத் தேவையான எல்லாப் பொருட்களையும் படைத்த அல்லாஹ் ஒருவனுக்கே மனிதன் இவ்வுலகில் எவ்வாறு வாழவேண்டும் என்ற அறிவும் உள்ளது. அதை அவன் சொன்னால்  மட்டுமே மனிதனுக்குத் தெரிய வரும் என்பதைத்தான் ஆதம் நபிக்கு அல்லாஹ் கற்றுக் கொடுத்த சம்பவம் சொல்கிறது. 

இவற்றுக்கெல்லாம் பின்னரே அல்லாஹ் சுவனம் செல்லும் வழியை சந்தர்ப்பத்துக்கு ஏற்ப ஆதம்நபிக்கு இறக்கிவைத்ததாக பின்வரும் வசனத்தில் கூறுகிறான். 

”என்னிடமிருந்து உங்களுக்கு நேர் வழி வரும் போது எனது நேர் வழியைப் பின்பற்றுவோருக்கு எந்தஅச்சமும் இல்லை. அவர்கள் கவலைப் படவும் மாட்டார்கள்" என்று கூறினோம்.”(2:38)

இவ்வுலகில் உள்ள அத்தனை அறிவுகளும், அல்லாஹ் நமக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோஅறிவித்துத் தந்த செய்திகளே. அவையே எம்மை இவ்வுலகத்தில் வாழவைக்கும் அறிவு. மனிதனின் இம்மை வாழ்க்கைக்குத் தேவையான செய்தியைப் பற்றி இப்போது நாம் பார்த்துவிட்டோம். மனிதனின் மறுமை வாழ்வுக்கான செய்தி என்பது என்ன? அதை சொல்லித்தரும் தகுதி யாருக்கு உண்டு? அதை நாம் சுயமாக சிந்தனை செய்யலாமா? என்பதை அடுத்து பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்...

மறுமை வெற்றிக்கு நாம் பின்பற்ற வேண்டியது எது..?

உலக விடயங்களில் அல்லாஹ் அருளிய செய்திகளின் அடிப்படையில் மனிதன் தன் வாழ்வை அமைத்துக் கொள்வதே மனிதனின் உலக வெற்றிக்கு தோதாக அமையும் என்பதை மேலே நாம் ஆதாரபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் பார்த்தோம். இந்த ஒரு அடிப்படையை வைத்தே மறுமை வெற்றிக்கு நாம் பின்பற்ற வேண்டியது எதனை என்பதையும் நிறுவ இருக்கிறோம்.

அதாவது உலக விடயங்களின் அறிவு என்பது எமது கண்ணுக்கு முன்னால் தென்படும் ஒன்றாகும். காதால் கேட்கும் விடயங்களாகும். ஐம்புலன்களாலும் உணரப்படும் அம்சங்களாகும். ஐம்புலன்களால் உணரப்படும் அம்சங்களிலேயே அல்லாஹ்வின் செய்திகளைப் பின்பற்றுவதில்தான் உலக வெற்றி உள்ளது என்பதை எமது பகுத்தறிவு ஒத்துக்கொள்கிறது என்றால் ஐம்புலனுக்கே எட்டாத விடயங்களில் அல்லாஹ்வின் செய்திகளைத் தவிர வேறு எந்த செய்திகளைப் பின்பற்றினாலும் எமக்கு மறுமையில் வெற்றி கிடைக்காது என்று சிந்திப்பதே தர்க்கரீதியான வெளிப்படை உண்மை.

மலக்குகள், முன்னைய வேதங்கள், நபிமார்கள், மறுமை, விதி, சுவர்க்கம், நரகம் என்று மறைவான விடயங்களை அல்லாஹ்வைத் தவிர யார் சொல்லித்தான் அறிய முடியும்?
புலன்களால் உணரும் ஒன்றை அல்லாஹ் சொல்லி மாத்திரமே அறியலாம் என்று எமது அறிவு சொல்லும் என்றால், புலன்களால் உணரப்படாத விடயங்களை அல்லாஹ்வைத்தவிர யாரும் சொல்லித்தர முடியாது என்று சிந்திப்பதில் என்ன கஷ்டம் இருக்கிறது?

இந்த ஒரு அடிப்படை விஷயம் மட்டும் போதும் மறுமை வெற்றிக்கு நாம் எதைப் பின்பற்ற வேண்டும் என்பதை அறிந்துகொள்ள.

வானங்களையும் பூமியையும் உள்ளடக்கிய பல்லண்டங்களில் அல்லாஹ் வைத்துள்ள செய்திகளை வைத்தே மறுமையின் வெற்றிக்கான செய்திகளை எமக்குச் சொல்லித் தரும் முழுப்பொறுப்பும் அல்லாஹ்வைச் சார்ந்ததே என்று அறிவுடையோர் ஏற்றுக்கொள்வர். எதற்குமே லாயக்கில்லாத, அற்பமான, மிகச்சொற்ப காலம்
வாழும் நிரந்தரமற்ற இவ்வுலக வாழ்க்கையினை வாழ்வதற்கும் அல்லாஹ் தான் செய்தி அறிவிக்க வேண்டும் என்று இருந்தால், எண்ணிப்பார்க்க முடியாத இன்பமுள்ள, நிரந்தர வாழ்க்கையான மறுமை பற்றிய செய்திகளை அல்லாஹ் சொல்லி மாத்திரமே அறியலாம் என்பதுதான் இதன் பொருள்.

பின்வரும் வசனத்தைக் கவனமாக ஆராய்ந்தால் நாம் அறிவு பூர்வமாக சொல்ல வந்த இதே விடயம் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படும்.

"தாவூதே! உம்மைப் பூமியில் வழித் தோன்றலாக நாம் ஆக்கினோம். எனவே மக்கள் மத்தியில் நியாயமான தீர்ப்பு வழங்குவீராக! மனோ இச்சையைப் பின்பற்றாதீர்! அது அல்லாஹ்வின் பாதையை விட்டும் உம்மை வழி கெடுத்து விடும். அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழி கெடுப்போர் விசாரணை நாளை மறந்ததால் அவர்களுக்குக் கடுமையான வேதனை உண்டு. வானத்தையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டதையும் வீணுக்காக நாம் படைக்கவில்லை. இது (ஏக இறைவனை) மறுப்போரின் எண்ணம். மறுப்போருக்கு நரகம் எனும் கேடு உள்ளது."(38:26,27)

இங்கு தாவூத் நபிக்கு அல்லாஹ் ஒரு கட்டளை பிறப்பிக்கின்றான். அதுதான் மனோ இச்சையைப் பின்பற்றாதீர் என்பதாகும். அதாவது ஒரு நபிக்குக் கூட சுயமாக சிந்தித்து மார்க்கத்தீர்ப்புக் கூற அனுமதி இல்லை. அதற்கு அல்லாஹ் கூறும் காரணம் அது அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழிகெடுக்கும் என்பதாகும். அல்லாஹ் தான் மனிதனுக்கு நேரான வழியைக் காட்டத் தகுதி பெற்றவன். பின்பற்றத் தகுதியான வழி எது? பின்பற்றக் கூடாத வழி எது என்ற விடயத்தைக் கூறும் இடத்தில் சம்பந்தமே இல்லாத ஒரு விடயத்தைக் கூறுவதுதான் இங்கு கவனிக்கப்படவேண்டியது ஆகும். "வானத்தையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டதையும் வீணுக்காக நாம் படைக்கவில்லை. இது (ஏக இறைவனை) மறுப்போரின் எண்ணம்" என்பதுதான் அந்த வசனம். சற்று ஆழமாக சிந்தித்துப் பார்த்தால் இந்த இடத்துக்கு இவ்வசனம் எவ்வளவு பொருத்தம் என்பது புரியும்.

அதாவது வானத்தையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டதையும் வீணுக்காக நாம் படைக்கவில்லை என்று அல்லாஹ் கூறிவிட்டு இவை வீணானவை என்று சொல்பவர்கள் யார் என்பதையும் குறிப்பிடுவது தான் இங்கு கவனிக்கத் தக்கது. அல்லாஹ்வை மறுப்பவர்கள் தான் இவை எல்லாம் வீண் என்று சொல்வார்களாம். உண்மையில் காபிர்கள் அப்படி சொல்கிறார்களா? அல்லது வானம், பூமி, அவற்றுக்கு இடைப்பற்றவற்றைப் பற்றி முஸ்லிம்களை விட அதிகம் ஆராய்ந்து அந்த சுகபோகத்தை அனுபவிக்கிறார்களா?

இவ்வுலக வாழ்க்கையே கெதி என்று இருப்பவர்கள் எப்படி இவற்றை வீணானது என்று சொல்வார்கள்?
உலக சுகங்களை அதிகம் அனுபவிக்க ஆசைப் படுபவர்கள் காபிர்கள்தான் என்று அல்லாஹ்வே பல இடங்களில் கூறிக்காட்டுகிறான்.
”அவ்வாறில்லை! எனினும் நீங்கள் இம்மையை விரும்புகிறீர்கள்.
மறுமையை விட்டு விடுகிறீர்கள்” (75:20,21)

நபிமொழிகளில் கூட இப்படித்தான் வருகிறது.
”இவ்வுலகம் மூமின்களுக்கு நரகம்,காபிர்களுக்கு சுவனம்”

எனவே முதலில் நாம் எடுத்துக்காட்டிய இவ் வசனத்தில் அல்லாஹ் சொல்லவரும் கருத்து இதுவல்ல. வானம், பூமி, அவற்றுக்கு இடையில் உள்ள படைப்புக்களில் ஒரு செய்தி உள்ளது. அந்தச் செய்தியை விட்டுவிட்டு அதில் பயனை மட்டும் அடைய நினைப்பதுதான் இவற்றை வீணுக்குப் படைத்ததாக நினைப்பதாகும். அது என்ன செய்தி?
இந்த அளவுக்கு நுணுக்கமான, ஒரு ஒழுங்கில் அமைந்த, அறிவுரீதியான, பிரமாண்டமான இந்தப் படைப்பைப் படைத்த ஒரு படைப்பாளன் இருக்கிறான். அவன்தான் அல்லாஹ். அவன் எப்பேர்பட்ட அறிவுக் கருவூலங்களைத் தன் படைப்பில் எமக்குப் பயன்படும் செய்திகளாகக் கொட்டியுள்ளான்? இப்படிப் பட்ட ஒருவன்தான் எனக்குக் கடவுளாக இருக்க முடியும்.

அண்ட சராசரங்களில் அவன் வைத்துள்ள செய்திகளை சரியான முறையில் விளங்கி அதன் படி நடக்கும் போதுதான் உலகில் வெற்றி கிடைக்கிறது என்றால், மிக நிச்சயமாக மறுமையில் வெற்றிபெற அவன் தான் வழிகாட்ட வேண்டும். எனக்கு நேர்வழியைக் காட்டும் பொறுப்பும், அறிவும் அவனிடமே உண்டு. தாவூத் நபி உட்பட எந்த ஒரு மனிதனாலும் தன் மனோ இச்சைப்படி சிந்தித்து நேரான வழியை அடைய முடியாது என்பதே அந்தச் செய்தியாகும். ஆதம் நபி உட்பட முஹம்மது நபிவரை உலக விடயம் உட்பட, மறுமை விடயங்களிலும் வெற்றி பெறுவதற்கான செய்திகளை அல்லாஹ்வால் மாத்திரமே வழங்க முடியும் என்று நாம் நம்புவதே ஆதாரபூர்வமான அறிவுபூர்வமான விடயமாகும். எனவே மார்க்கத்தின் மூலாதாரம் என்பது அல்லாஹ்வின் தூய வஹி மட்டுமே என்பது இலகுவாக நிரூபனமாகியுள்ளது.
அல்லாஹ் நாடினால் அடுத்தும் வரும்..
S.H.R. ரஸ்மி

No comments:

Post a Comment