Wednesday, December 7, 2011

சுனாமி சுமந்து வந்த... சோமாலியர்களின் சோகக் கதை...!!!


"நாங்கள் கடற்காவலர்கள் (Coastal Guards)" . இவர்கள் தங்களை இப்படித்தான் அழைத்துக்கொள்கிறார்கள்.
ரஷ்ய கடற்படையினர் உல்லாசப் பயணிகள் போல சென்று கடற் காவலர்களை நவீன ஆயுதங்களால் தாக்கும் காட்சி
கடற்காவலர்களின் வாழ்க்கை மற்றும், கப்பல்களை எப்படி கைப்பற்றுகிறார்கள்...?



    சோமாலியா என்றதும் பசியும், பஞ்சமும், பட்டினிச்சாவுகளும் தான் யாருக்கும் ஞாபகம் வரும் இதுவரை. இப்போதோ கடற்கொள்ளையர்கள் எனும் சொல் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களையும், உலக நாடுகளையும் மிரட்டுகிறது. இந்த ஆண்டில் மட்டும் 95 கப்பல்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இதில் உக்ரேனிய ஆயுதக்கப்பல், சுவிஸ் நாட்டு அக்யுர், இத்தாலி நாட்டின் புரோகிரசோ, ஜப்பானின் எம்டி ஸ்டோல்ட் வாலர், சௌதி அரேபியாவின் சிரியஸ் ஸ்டார் இன்னும் ஹாங்காங், போர்ச்சுக்கல், பின்லாந்து போன்ற நாடுகளின் கப்பல்கள் உட்பட 35 கப்பல்களை கடத்தியிருக்கிறார்கள். இவற்றில் பிணையத்தொகை கொடுத்து மீட்டது போக இன்னும் 17கப்பல்களும், 339 ஊழியர்களும் கடற்கொள்ளையர்களிடம் சிக்கியுள்ளனர். சௌதி அராம்கோவின் சியஸ் ஸ்டார் உலகிலேயே மிகப்பெரிய கப்பலாகும். இதில் 100மில்லியன் டாலர் மதிப்பிலான எண்ணெயும் உள்ளது. இந்தக்கப்பலுக்கு மட்டும் 25மில்லியன் டாலர் பிணையத்தொகையாக அவர்கள் கேட்டுள்ளனர்.


   
    சூயஸ்கால்வாய் தோண்டப்படுவதற்கு முன்புவரை ஐரோப்பிய நாடுகள் இந்தியப்பெருங்கடல் நாடுகளுக்கு வருவதற்கு ஆப்பிரிக்க கண்டத்தை சுற்றியே வரவேண்டியதிருந்தது. சூயஸ்கால்வாய் தோண்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்ததும் செங்கடல் பகுதி கப்பல் போக்குவரத்து மிகுந்த‌ பகுதியானது. இந்தப்பகுதியில் மிக நீண்ட கடல்கரையை கொண்ட நாடு சோமாலியா. மீன்பிடிப்பிலும் அதனைச்சார்ந்த தொழில்களிலும் சிறந்து விளங்கவேண்டிய அளவிற்கு புவியியல் அமைப்பைக்கொண்ட நாடு சோமாலியா. ஆனால் உள்ளூர் மீனவர்கள் கூட மீன் கிடைக்காமல் திண்டாடுகிறார்கள். கார‌ண‌ம் ப‌ன்னாட்டு ப‌காசுர‌ மீன்பிடிக‌ப்ப‌ல்க‌ள் இய‌ந்திர‌ங்க‌ளுட‌னும் தேர்ந்த‌ தொழில்நுட்ப‌த்துட‌னும் இந்த‌ப்ப‌குதியையே ச‌ல்ல‌டை போட்டு அரித்துவிடுகின்ற‌ன‌. இதை த‌ட்டிக்கேட்ப‌த‌ற்கோ, மீன்பிடி தொழிலை ஊக்க‌ப்ப‌டுத்துவ‌த‌ற்கோ நிலையான‌ அர‌ச‌மைப்பு எதுவும் சோமாலியாவில் இல்லை. அந்த‌ந்த‌ப்ப‌குதியில் ஆதிக்க‌ம் மிகுந்த‌வ‌ர்க‌ள் த‌ங்க‌ளின் பாதுகாப்புக்கென‌ ஆயுத‌க்குழுக்க‌ளை ஏற்ப‌டுத்திக்கொண்டு, த‌ங்க‌ளின் ஆதிக்க‌த்தை த‌க்க‌வைத்துக்கொள்வ‌த‌ற்காக‌ தொடர்ச்சியாக‌ குழு மோத‌ல்க‌ளில் ஈடுப‌ட்டு வ‌ருகின்ற‌ன‌ர். தொடர்ச்சியான‌ இந்த‌ ச‌ண்டையில் விவ‌சாய‌மோ வேறு உற்ப‌த்திக‌ளோ இல்ல‌ம‌ல் போன‌து. நில‌த்திலுள்ள‌ க‌னிம‌ங்க‌ளோ ப‌ன்னாட்டு நிறுவ‌ன‌ங்க‌ளின் கைக‌ளில். அமெரிக்காவும் த‌ன் ப‌ங்குக்கு ம‌க்க‌ள் அல்காய்தாவை ஆத‌ரிப்ப‌தாக‌ கூறி (சோமாலிய‌ ம‌க்க‌ள் அனைவ‌ரும் இஸ்லாமிய‌ர்க‌ள்) யுத்த‌க்குழுக்க‌ளுக்கு ஆயுத‌ம் வ‌ழ‌ங்கிய‌துட‌ன் எத்தியோப்பியாவையும் சோமாலிய‌ மீது ப‌டையெடுக்க‌த்தூண்டிய‌து. இவ்வாறு சின்னாபின்ன‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ சோமாலிய‌ ம‌க்க‌ளில் ஒரு ப‌குதியின‌ர் க‌ட‌ற்கொள்ளைய‌ர்க‌ளாக‌ உருமாறினார்க‌ள்.

     ம‌னித‌ன் க‌ப்ப‌ல்க‌ளை க‌ட்டி அதில் ப‌ண்ட‌ மாற்ற‌ம் செய்ய‌த்தொட‌ங்கிய‌ கால‌ம் முத‌ல் க‌ப்ப‌ல்க‌ளை கொள்ளைய‌டிப்ப‌தும் க‌ட‌த்துவ‌தும் வ‌ர‌லாறு நெடுக‌ ந‌ட‌ந்துகொண்டுதானுள்ள‌து. 

க‌ரீபிய‌க்க‌ட‌ற்கொள்ளைய‌ர்க‌ளின் அட்ட‌காச‌ம் பிர‌சித்தி பெற்ற‌து. சிங்க‌ப்பூர் ப‌ண‌க்கார‌ நாடாக‌ இருப்ப‌த‌ற்கு க‌ட‌ற்கொள்ளையில் பெற்ற‌ ப‌ண‌த்தை வ‌ர்த்த‌க‌த்தில் முத‌லீடு செய்த‌துதான் முத‌ன்மையான‌ கார‌ண‌ம். முன்னாள் க‌ட‌ற்கொள்ளைய‌ர்க‌ளின் வாரிசுக‌ள் இன்று அங்கே ம‌திப்புமிக்க‌முத‌லாளிக‌ள். க‌ட‌ற்கொள்ளைய‌ர்க‌ளுக்கு பொது ம‌ன்னிப்பு வ‌ழ‌ங்கி த‌ன் நாட்டில் அவ‌ர்க‌ளை முத‌லீடு செய்ய‌வைத்த‌து அமெரிக்கா. த‌ங்க‌ம் ஏற்றிவ‌ந்த‌ ஸ்பெயின் க‌ப்ப‌ல்க‌ளை கொள்ளைய‌டித்த‌ ஆங்கிலேய‌ க‌ட‌ற்கொள்ளைய‌ர்க‌ளின் ப‌ண‌ம் இங்கிலாந்துக்கு உத‌விய‌து. இப்ப‌டி க‌ட‌ற்க‌ள்ளையால் ஆதாய‌ம‌டைந்த‌ நாடுக‌ள் சோமாலிய‌ க‌ட‌ற்கொள்ளைய‌ர்க‌ளை ஒழித்துக்க‌ட்ட‌ முழுமூச்சுட‌ன் கிள‌ம்பியிருப்ப‌த‌ற்கு கார‌ண‌ம் என்ன‌? க‌ட‌ற்கொள்ளையை த‌டுப்ப‌து தான் நோக்க‌மா? இல்லை அத‌ன் பின்னே வேறொரு முக்கிய‌த்துவ‌ம் வாய்ந்த‌ பிர‌ச்ச‌னை ஒன்று உள்ள‌து.


     இந்த‌ இட‌த்தில் ஒரு விள‌க்க‌ம் தேவைப்ப‌டுகிற‌து. சௌதி அரேபிய‌க்க‌ப்ப‌ல், ஜ‌ப்பானிய‌க்க‌ப்ப‌ல் என்றால் அந்த‌ந்த‌ நாட்டின் அர‌சுக்குச்சொந்த‌மான‌ க‌ப்ப‌ல்க‌ள் அல்ல‌. த‌னியார் நிறுவ‌ன‌ங்க‌ளுக்கு சொந்த‌மான‌து தான். ஒருசில‌ பெருமுத‌லாளிக‌ளுக்கு சொந்த‌மான‌ க‌ப்ப‌ல்க‌ளையும் அதிலுள்ள‌ ச‌ர‌க்குக‌ளுகளையும் பாதுகாப்ப‌த‌ற்குத்தான் க‌ப்ப‌ற்ப‌டை அனுப்ப‌ப்ப‌டுகிற‌து. ம‌க்க‌ளின் வ‌ரிப்ப‌ண‌த்தில் இய‌ங்கும் க‌ப்ப‌ற்ப‌டை, அடித்த‌ட்டு ம‌க்க‌ளை காப்ப‌த‌ற்கு ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டாத‌ க‌ப்ப‌ற்ப‌டை முத‌லாளிக‌ளின் சொத்தை பாதுகாப்ப‌த‌ற்கு அனுப்ப‌ப்ப‌டுகிற‌து.  மேலும் க‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ க‌ப்ப‌ல்க‌ளை விடுவிப்ப‌த‌ற்கு கொடுக்க‌ப்ப‌டும் பெருந்தொகையையும் அந்த‌ நிறுவ‌ன‌ங்க‌ள் விலையை உய‌ர்த்துவ‌த‌ன் மூல‌ம் ஒன்றுக்கு இர‌ண்டு ம‌ட‌ங்காக‌ ம‌க்க‌ளிட‌மிருந்து வ‌சூலித்துக்கொள்ளும். பின் க‌ட‌ற்கொள்ளைய‌ர்க‌ள் ஒடுக்க‌ப்ப‌ட்டாலும் ஏறிய‌விலை ஏறிய‌து தான் இற‌ங்க‌ப்போவ‌தில்லை. என‌வே இந்த‌ க‌ட‌ற்கொள்ளையும் ப‌ன்னாட்டு முத‌லாளிக‌ளின் லாபத்திற்குத்தான் ப‌ய‌ன்ப‌ட‌ப்போகிற‌து.

     2004 டிச‌ம்ப‌ரில் ஏற்ப‌ட்ட‌ சுனாமி ஒரு மிக‌ப்பெரிய‌ உண்மையை உல‌கிற்கு எடுத்துக்காட்டிய‌து. அதுதான் சோமாலிய‌ க‌ட‌ற்கொள்ளைக‌ளை வேட்டையாட‌க்கிள‌ம்பிய‌தின் பின்னாலும் மறைந்திருக்கும் முக்கிய‌த்துவ‌ம் வாய்ந்த‌‌ பிர‌ச்ச‌னை. ப‌ல‌ ஆண்டுக‌ளாக‌ சோமாலிய‌க்க‌ட‌ற்ப‌ர‌ப்பில் கொட்ட‌ப்ப‌ட்டு வ‌ந்திருக்கும் ந‌ச்சுக்க‌ழிவுக‌ளைத்தான் சுனாமி வெளிச்ச‌ம் போட்டுக்காட்டிய‌து. சோமாலிய‌க்க‌ட‌ற்ப‌ர‌ப்பில் கொட்ட‌ப்ப‌ட்டுவ‌ந்த‌ ந‌ச்சுக்க‌ழிவுக‌ள் சுனாமியால் க‌ட‌ற்க‌ரையில் குவிந்த‌ன‌. 
காரீய‌ம், காட்மிய‌ம் போன்ற‌ க‌ழிவுக‌ளும், யுரேனிய‌க்க‌திவீச்சுக்க‌ழிவுக‌ளும் ம‌ற்றும் ம‌ருத்துவ‌, ர‌சாய‌ன‌க்க‌ழிவுக‌ள் என‌ ப‌ல‌வ‌கை ந‌ச்சுக்க‌ழிவுக‌ளால் இன்ன‌தென்று தெரியாத‌ புதுப்புது வியாதிக‌ளுக்கும், புற்று நோய் போன்ற‌ கொடிய‌ நோய்க‌ளுக்கும் ஆளாகி மாண்டு வ‌ருகின்ற‌னர் மக்கள். ப‌ல்லாண்டு கால‌மாக‌ ஏட‌ன் குடாவில் கொட்ட‌ப்ப‌ட்டுவ‌ரும் ந‌ச்சுக்க‌ழிவுக‌ளை சுனாமி அம்ப‌ல‌ப்ப‌டுத்திய‌ போதும் ஊட‌க‌ங்க‌ளில் இந்த‌ விச‌ய‌ம் க‌வ‌ன‌ம் பெற‌வில்லை. ப‌ட்டினிச்சாவுக‌ளின் முதுகுக்குப்பின்னே கொடிய‌ க‌ழிவுக‌ளால் ஏற்ப‌ட்ட‌ கோர‌ ம‌ர‌ண‌ங்க‌ளும் புதைக்க‌ப்ப‌ட்ட‌ன‌. இப்போது க‌ப்ப‌ல்க‌ளுக்கு பெறும் ப‌ணைய‌த்தொகை மூல‌ம் சோமாலிய‌க்க‌ட‌ற்க‌ரையை சுத்த‌ப்ப‌டுத்த‌ப்போகிறோம் என‌ க‌ட‌ற் கொள்ளைய‌ர்க‌ள் அறிவித்திருப்ப‌தால்தான் அது உல‌கின் க‌வ‌ன‌த்திற்கு வ‌ந்திருக்கிற‌து. 

ஏகாதிப‌த்திய‌ங்க‌ளின் இந்த‌ அயோக்கிய‌த்த‌ன‌த்தை சுனாமி  அம்ப‌ல‌ப‌டுத்தி ஏழாண்டுக‌ளாகியும் இதுப‌ற்றி எதுவும் கூறாம‌ல் ஊமையாய் இருந்த‌ ஐநா ச‌பை த‌ற்போது வேறுவ‌ழியில்லாம‌ல் ந‌ச்சுக்க‌ழிவுக‌ள் கொட்ட‌ப்ப‌டுவ‌தை ஒப்புக்கொண்டுள்ள‌து. இப்போதும் ஆட்கொல்லி ந‌ச்சுக்க‌ளை கொட்டி ம‌க்க‌ளை கொன்ற‌ ஏக‌திப‌த்திய‌ த‌னியார் நிறுவ‌ன‌ங்க‌ள் மீது எந்த‌ ந‌ட‌வ‌டிக்கையும் எடுக்க‌த்துணியாத‌ ஐநா ச‌பை க‌ட‌ற்கொள்ளையை ஒடுக்குவ‌த‌ற்கு அந்த‌ ஏகாதிப‌த்திய‌ நாடுக‌ளிட‌மே போர்க்க‌ப்ப‌ல்க‌ளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிற‌து.

     1992ல் உல‌க‌ நாடுக‌ளிடையே ஒரு உட‌ன்பாடு கையெழுத்தான‌து. பேச‌ல் என்று அழைக்க‌ப்ப‌டும் அந்த‌ உட‌ன்பாடு த‌குந்த‌ பாதுகாப்பு ஏற்ப‌டுக‌ள் இல்லாம‌ல் உல‌கின் எந்த‌ப்ப‌குதியிலும் ந‌ச்சுக்க‌ழிவுக‌ள் கொட்ட‌ப்ப‌டுவ‌தை த‌டுக்கிற‌து. இதை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்ட‌ யோக்கிய‌சிகாம‌ணி நாடுக‌ள்தான் யாருக்கும் தெரியாம‌ல் எந்த‌ பாதுகாப்பு ஏற்பாடுக‌ளும் இல்லாம‌ல் ந‌ச்சுக்க‌ழிவுக‌ளை க‌ட‌லில் கொட்டிக் கொண்டிருந்திருக்கின்ற‌ன‌. அதே யோக்கிய‌சிகாம‌ணி நாடுக‌ள் தான் வெளிப்ப‌ட்டுவிட்ட‌ த‌ங்க‌ள் அயோக்கிய‌த்த‌ன‌த்தை ம‌றைப்ப‌த‌ற்கு க‌ட‌ற்கொள்ளைய‌ர்க‌ளை த‌ண்டிக்க‌த்துடிக்கின்ற‌ன‌. ம‌னித‌ ம‌ர‌ண‌த்திலும் லாப‌ம் பெற‌த்துடிக்கும் இந்த‌ கொலைகார‌ நிறுவ‌ன‌ங்க‌ளால்தான் த‌ற்போது ந‌ச்சுக்க‌ழிவு ஏற்றும‌தி வியாபார‌ம் ச‌க்கைபோடு போடுகிற‌து. இத‌ற்காக‌த்தொட‌ங்க‌ப்ப‌ட்ட‌ நிறுவ‌ன‌ங்க‌ள் ப‌ண‌க்கார‌ நாடுக‌ளிட‌மிருந்து க‌ழிவுக‌ளை இற‌க்கும‌தி செய்து ஏழை நாடுக‌ளின் விவ‌சாயிக‌ளை விலைபேசி அவ‌ர்க‌ளின் விளைநிலங்க‌ளில் புதைத்துவ‌ருகின்ற‌ன. சோமாலியா ம‌ட்டுமில்லாம‌ல் நைஜீரியா, கினியா, பிசாவ், ஜீபொடி, சென‌க‌ல் போன்ற‌ நாடுக‌ளிலும் கொட்ட‌ப்ப‌டுகின்ற‌ன‌. இந்தியாவிலும் கூட‌ காகித‌ ஆலைக்க‌ழிவுக‌ள் என்ற‌ பெய‌ரில் இக்க‌ழிவுக‌ள் நில‌ங்க‌ளில் புதைக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. (அண்மையில் அணுஆற்ற‌லில் இய‌ங்கும் நிமிட்ஸ் கப்பல் சென்னைக்கு துணை ந‌டிகைக‌ளை விசாரித்துச்செல்வ‌த‌ற்குத்தான் வ‌ந்த‌து என்று ந‌ம்புகிறீர்க‌ளா?)‌ க‌திர்வீச்சு வெளிப்ப‌டாம‌ல் புதைப்ப‌த‌ற்கு ஒரு ட‌ன்னுக்கு ஆயிர‌ம் டால‌ர் செல‌வு பிடிக்குமென்றால், ஏழை நாடுக‌ளின் க‌ட‌ல்க‌ளிலும், நில‌ங்க‌ளிலும் புதைப்ப‌த‌ற்கு இர‌ண்ட‌ரை டால‌ர்தான் செல‌வு பிடிக்கும். லாப‌ம்தானே முக்கிய‌ம். ஏழை ம‌க்க‌ளின் உயிர் முக்கிய‌மான‌தா என்ன‌?

     ம‌றுப‌க்கம், இந்த‌ க‌ட‌ற்கொள்ளைய‌ர்க‌ள் மெய்யாக‌வே ந‌ச்சுக்க‌ழிவுக‌ளை சுத்த‌ப்ப‌டுத்துவ‌த‌ற்காக‌த்தான் க‌ப்ப‌ல்க‌ளை க‌ட‌த்துகிறார்க‌ளா? சாவின் விளிம்பிலுள்ள‌ சொந்த‌ நாட்டு ம‌க்க‌ளை காப்ப‌த‌ற்கு ஐநா அனுப்பிய‌ உணவு, நிவார‌ணப் பொருட்க‌ளைக்கூட‌ கொள்ளைய‌டித்துச்சென்ற‌வ‌ர்க‌ள் தான் இவ‌ர்க‌ள். த‌ம்முடைய‌ முழு ஆதிக்க‌த்திற்காக‌ ச‌ண்டையிட்டுக்கொள்ளும் இவ‌ர்க‌ளிட‌ம் க‌ழிவுக‌ளை அக‌ற்றுவ‌த‌ற்கான‌ திட்ட‌மோ அமைப்புக‌ளோ இல்லை. ப‌ட்டினியால் செதுக்கொண்டிருக்கும் சொந்த‌ம‌க்க‌ளின் சாவைக்குறித்த‌ தெளிவான‌ பார்வை இல்லை. நாட்டின் நில‌மை, அத‌ற்கான‌ கார‌ண‌ங்க‌ள், அதை தீர்க்கும் செய‌ல் முறைக‌ள் என‌ எதுவுமின்றி ம‌க்க‌ளைத்திர‌ட்டாம‌ல், போராட்ட‌த்தை முன்னெடுக்காம‌ல் சில‌ க‌ப்ப‌ல்க‌ளை க‌ட‌த்துவ‌தால் எதுவும் விளைந்துவிட‌ப்போவ‌தில்லை.

     ந‌ச்சுக்க‌ழிவு கொட்டுத‌ல், உல‌க‌ம் வெப்ப‌ம‌ய‌மாத‌ல், த‌ண்ணீர்க்கொள்ளை, சூழ‌லை மாசுப‌டுத்துத‌ல், விண்வெளிக்குப்பைக‌ள் என்று ஏகாதிப‌த்திய‌ நிறுவ‌ன‌ங்க‌ள் உல‌க‌ ம‌க்க‌ள் மீது திணிக்கும் பிர‌ச்ச‌னைக‌ள் ப‌ல‌ப்ப‌ல‌. இவைக‌ள் ஏதாவ‌து ஒரு த‌னி நாட்டுட‌ன் தொட‌ர்புள்ள‌தென்றோ, சில‌பிரிவு ம‌க்க‌ளுக்கான‌ பிர‌ச்ச‌னை என்றோ ஒதுக்கிவிட‌முடியாது. இவைக‌ளை உண‌ர்ந்து மைய‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ போராட்ட‌த்தை தொட‌ங்காத‌வ‌ரை ஏழை நாடுக‌ளையும் அத‌ன் ம‌க்க‌ளையும் ஏகாதிப‌த்திய‌ங்க‌ள் கொன்று குவித்துக்கொண்டேயிருக்கும்.
சோமாலிய கடற்கொள்ளைக்காரர்கள் உருவான கதை...!!

சோமாலியா 98.5% முஸ்லிம்கள் வாழக்கூடிய நாடு. வடகிழக்கு ஆப்ரிக்காவில் உள்ளது, மொத்த மக்கள் தொகை சுமார் ஒன்பது மில்லியன் (90 லட்சம்). மிக நீண்ட கடற்கரையை கொண்ட நாடு. இந்திய கடலையும், எடேன் வளைகுடாவையும் (Gulf of Aden) கொண்ட நாடு. 1991 முதல் கடுமையான சிவில் யுத்தங்களால் பாதிக்கப்பட்ட நாடு. மீன்பிடி தொழில் தான் அவர்களது முக்கியமான தொழில். அந்த தொழிலுக்கே ஆபத்து வந்தால்?  

சுனாமி பேரலைகளால் உலகமே ஸ்தம்பித்து போய் நிற்க அந்த அலைகள் தான் 
சோமாலியாவை பற்றிய உண்மைகளை வெளிக்கொண்டுவந்தன. அதாவது, அந்த அலைகள் சோமாலிய கடலில் கொட்டப்பட்டிருந்த விஷக்கழிவுகளை வெளிக்கொண்டுவந்தன. இந்த விஷக்கழிவுகள் பெரிய கண்டைனர்களிலும் பேரல்களிலும் ஒழுகிய நிலையில் இருந்தன. கொஞ்சநஞ்சமல்ல, பெரிய அளவில் கழிவுகள். ஐ.நா சுற்றுசுழல் அமைப்பு அதிர்ச்சியில் உறைந்தது.                        

இங்கு ஒன்றை நாம் கவனிக்க வேண்டும், மிக நீண்ட காலங்களாகவே,
அதாவது 1989 முதலே, ஐரோப்பிய நாட்டு தொழிற்சாலைகள் தங்கள் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை சோமாலியா நாட்டு கடலில் கொட்டுகின்றன என்று பரவலாக ஒரு குற்றச்சாட்டு இருந்தது.


இப்போது சுனாமி அலைகள்  தெள்ளத்தெளிவாக அந்த உண்மைகளை வெளிக்கொண்டுவந்துவிட்டன . இதில் என்ன பெரிய கொடுமை என்றால், அந்த கழிவுகளில் அணுக்கழிவுகளும் இருந்ததுதான். 

நீண்ட காலங்களாக சோமாலியா கடற்கரை பகுதி மக்கள் அனுபவித்து வந்த உடல்நிலை கோளாறுகளுக்கும் விடை அளித்துவிட்டது சுனாமி. கேட்பவர் நெஞ்சை நொறுக்கும் 
செய்தி இது. ஒருவனை அழித்து இன்னொருவன் வாழ்வது...

பின்னர் இது சம்பந்தமான உண்மைகள், ஆதாரங்கள் வெளிவந்தன. ஐ.நா சுற்றுசூழல் அமைப்பு இதற்கெல்லாம் காரணம் சில ஐரோப்பிய தொழிற்சாலைகள்தான் என்று வெளிப்படையாக கூறியது.

இந்த கொடுமையெல்லாம் போதாது என்று, ஆசிய மற்றும் ஐரோப்பிய
நாடுளில் இருந்து வரக்கூடிய கப்பல்கள் சோமாலிய கடற்பகுதியில்
சட்டத்திற்கு விரோதமாக மீன்பிடித்தன. இது சோமாலியர்களுக்கு மாபெரும் பிரச்சனை. ஏனென்றால் இவர்களிடம் இருப்பதோ சிறிய படகுகள் மற்றும் கப்பல்கள், அவை அந்த கப்பல்களுக்கு எந்த விதத்திலும் நிகராகாது. 


இப்படி ஒரு புறம் கழிவுகளாலும், மறுபுறம் சட்டவிரோத மீன்பிடி
நிகழ்வுகளாலும் சின்னா பின்னமாகி போனார்கள் சோமாலியர்கள். இதையெல்லாம் தட்டிக்கேட்பதற்க்கு நிலையான அரசாங்கம் கிடையாது.
இந்த சூழ்நிலை தான், சில சோமாலியர்களை மீடியாக்கள் கூறுவது 
போல் கொள்ளையர்கள் ஆக்கியது. 

இவர்கள் என்ன கூறுகிறார்கள் இதைப்பற்றி?

தாங்கள் கொள்ளை அடிப்பது சீரழிந்து போயிருக்கும் சோமாலிய கடற்பகுதியை மேம்படுத்துவதற்க்காகவும், மேற்கொண்டு கப்பல்கள் 
எந்த அசம்பாவிதத்தையும் செய்யாமல் காப்பதற்காகவும் தான் என்பது. 

இன்றளவும் சட்டவிரோதமாக மீன்பிடிப்பது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. சென்ற
 வருடம் ஒரு ஸ்பெயின் நாட்டு கப்பலை இவர்கள் கடத்தி சென்றதாக செய்திகளில் பார்த்திருப்போம். அந்த கப்பலை இவர்கள் கடத்தியதற்கு
இவர்கள் கூறிய காரணம், அந்த 
கப்பல் சோமாலிய கடற்பகுதியில் மீன்பிடித்தது என்பது தான்.

இதனால் தான் இவர்கள் தங்களை கடற்காவலர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள். 

அதுசரி எப்படி இத்தனை கப்பல்கள் இவர்களிடம் மாட்டுகின்றன? இதற்கு நாம் சோமாலியாவின் பூலோக வரைப்படத்தை பார்த்தால் விடைச்சொல்லி விடலாம். ஐரோப்பாவில் இருந்து சூயஸ் கால்வாய் வழியாக வந்து
வளைகுடா நாடுகளை தாண்டிசெல்லும் கப்பல்கள் எல்லாம் 
இவர்களது நாட்டையொற்றிய  எடேன் வளைகுடாவை கடந்து தான் செல்லவேண்டும். அங்கே தான் மடக்குகிறார்கள். 

இதையெல்லாம் விடுங்கள், சமீபத்தில் உலகைஅதிர்ச்சியில் உறைய வைத்தார்கள் தெரியுமா இவர்கள்? நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 

அதாவது, சமீபத்தில் ஹைய்தி தீவில் ஏற்பட்ட பூகம்பத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்விற்கு தாங்கள் ஒரு பெரிய தொகையை தருவதாகவும்,  அந்த தொகை எப்படியாவது அம்மக்களுக்கு சென்று விடும் என்று அறிவித்ததும் தான். 

கப்பல்களை எப்படி கடத்துகிறார்கள்...???
  • எப்படி பிடிக்கிறார்கள்? 
  • எப்படி பணம் பெறுகிறார்கள்? 
  • பிடித்தவர்களை எப்படி நடத்துகிறார்கள்?  
  • எப்போது இது முடிவுக்கு வரும்?

இந்த கேள்விகளுக்கான பதிலை நாம் சொல்லுவதைவிட அவர்களில் ஒருவரான 
சாஇத் (saaid, Nick name) பிரபல இஸ்லாம் ஆன்லைன் தளத்திற்கு தந்த பேட்டி உங்கள் பார்வைக்காக...

நீங்கள் எப்படி இதில்?

நான் கடற்காவலனாக (Coastal Guard) ஆவதற்கு முன்பு, சோமாலியாவின் முடக் (Mudug) பகுதியில் உள்ள ஒரு கடற்கரை கிராமத்தில் மீனவனாக இருந்தவன்.

சட்டவிரோதமாக எங்கள் கடலில் மீன்பிடிப்பவர்களுக்கு எதிராக நாங்களே போராட முடிவெடுத்தோம்.  அதுமட்டுமல்லாமல், எங்கள் மீன்பிடி இயந்திரங்களை நாசமாக்கிய வெளிநாட்டு கயவர்களிடமிருந்து எங்கள் இயற்கை வளங்களை காப்பதற்காகவும் போராட முடிவெடுத்தோம்.

இப்படி சட்டவிரோதமாக எங்கள் கடலில் மீன்பிடிக்கும் கப்பல்கள் எங்களுக்கென்று எதையும் மிச்சம் வைத்ததில்லை. சில சமயங்களில் எங்கள் கடற்கரையிலிருந்து இரண்டு அல்லது மூன்று மைல் தொலைவிலேயே மீன்பிடிப்பார்கள். அப்போது எங்களிடம் AK-47 துப்பாக்கிகள் மற்றும் சிறிய அளவிலான ஆயுதங்கள் இருந்தன. ஆனால் சிறிய அளவிலான மோட்டார் படகுகள் (Skiffs) நிறைய இருந்தன.

ஒரு வெளிநாட்டு மீன்பிடி கப்பலை, சுமார் 200 படகுகளுடன் சென்று சுற்றிவளைப்போம், ஒவ்வொரு சிறிய படகிலும் AK-47 தாங்கிய மூன்று ஆட்கள் இருப்பார்கள். அந்த காலங்களில் யாரும் எங்களுக்கு பொருளாதார ரீதியாக உதவியதில்லை.

இப்படி சட்டவிரோதமாக மீன்பிடிக்கும் வெளிநாட்டு கப்பல்கள் மட்டு மில்லாமல், இங்கே விஷக்கழிவுகளை கொட்டும் வெளிநாட்டு கப்பல்களையும் பார்த்திருக்கிறோம். இவைகள் தான் எங்கள் கடலில் மீன்கள் இறப்பதற்கும் எங்கள் மக்கள் உடல்நிலை கோளாறுகளால் பாதிக்கப்படுவதற்க்கும் காரணம். அதனால் இவர்கள் கழிவுகளை கொட்டுவதற்க்குள் பிடித்துவிட முடிவெடுத்தோம்.

இதுவரை எத்தனை மீன்பிடி படகுகளை இழந்திருப்பீர்கள்?

சோமாலியா ஒரு பெரிய நாடு. அதனால் எத்தனை படகுகளை நாங்கள் அனைவரும் இழந்திருப்போம் என்ற சரியான கணக்கு என்னிடம் கிடையாது. ஆனால் என்னுடைய அனுபவத்தை கூற முடியும். ஒருமுறை நாங்கள் 61 மீன்பிடி படகுகளுடன் சென்றிருந்தோம்.

நள்ளிரவு நேரம், எங்களில் சிலர் அசந்து தூங்கிக்கொண்டிருந்தோம். அப்போது எங்களுக்கு நடுவே ஒரு பெரிய கப்பல் கடந்து சென்றது. அதனால் ஏற்பட்ட
கடல் மாற்றத்தால், எங்களில் சிலர் கடலில் மூழ்கி இறந்து விட்டார்கள்.
61 படகுகளில், ஒன்பது மட்டுமே மிஞ்சின. மிக துயரமான சம்பவம் அது.  

இது எனக்கு ஏற்பட்ட அனுபவம், இதுபோல நாடு முழுவதும் எங்கள் மீனவர்கள் படக்கூடிய கஷ்டங்களை யூகித்து கொள்ளுங்கள்.         

கப்பல்களை கடத்துவதற்கு எம்மாதிரியான உக்திகளை கையாள்கிறீர்கள்?

ஒரு பெரிய படகு மற்றும் இரு சிறிய அதிவேக படகுகளுடன் செல்வோம்.
சிறிய படகுகள் ஒவ்வொன்றிலும் ஐந்து பேர் இருப்பார்கள். அவர்களிடம் RPG (Rocket Propelling Granades) போன்ற ஆயுதங்களும், GPS (Global Positioning System) மற்றும் தானியங்கி தகவல் தரும் (AIS, Automated Information Systems) கருவிகள் போன்ற அதிநவீன கருவிகளும் இருக்கும்.
பக்கத்தில் சரக்கு கப்பல் வருவதாக தெரிந்தால், எங்கள் படகுகளுடன் சென்று அந்த கப்பலை முற்றுகையிட ஆரம்பிப்போம். எங்களின் இரு சிறு படகுகள் அந்த கப்பலை தாக்க ஆரம்பிக்கும். பெரிய படகோ அந்த சிறு படகுகளுக்கு பின்னாலிருந்து உதவிபுரியும். நாங்கள் கப்பலின் கேப்டன் இருக்கும் பகுதியைத்தான் தாக்குவோம். சில கேப்டன்கள் எங்கள் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பணிந்து விடுவார்கள், மற்றவர்களோ தங்கள் கப்பல்களை வேகமாக அந்த இடத்தை விட்டு அப்புறப்படுத்துவார்கள்.

நாங்கள் கப்பலை பிடித்தால், அதன் கேப்டனிடம் பக்கத்திலுள்ள கடற்படை தளத்திற்கு, நாங்கள் அந்த கப்பலை பிடித்துவிட்டதாக தகவல் அனுப்ப சொல்வோம். பிறகு அந்த கப்பலை சோமாலிய கடற்கரையை நோக்கி எடுத்துச்  செல்வோம்.

நீங்கள் அந்த கப்பலில் உள்ளவர்களிடம் எப்படி நடந்துக்கொள்வீர்கள்? அவர்களின் 
பொருட்களை எடுத்துக்கொள்வீர்களா ?

கடத்தப்பட்டவர்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று நாங்கள் வரைமுறைகள் (Code of Conduct) வைத்திருக்கிறோம். நாங்கள் அவர்களை மதிக்கிறோம். அவர்களின் பொருட்களையோ அல்லது கப்பலின் சரக்கையோ நாங்கள் தொடமாட்டோம். அவர்களை கட்டவோ அல்லது அவர்களிடம் பணமோ கேட்கமாட்டோம்.

எங்களுடைய அணுகுமுறையெல்லாம் அந்த கப்பலின் உரிமையாளரிடம்தான். எங்களுக்கு வேண்டியது பணம், அதை அந்த உரிமையாளரிடம் இருந்து மட்டும் தான் பெற நினைப்போம்.

நீங்கள் கேட்ட பணம் உங்களுக்கு எப்படி வந்தடைகிறது?              

நாங்கள் பணத்தை இரு வழிகளில் பெற்றுக்கொள்கிறோம். ஒண்ணரை மில்லியன் (15 லட்சம்) அமெரிக்க டாலர்களுக்கு அதிகமான தொகையாக இருந்தால், கடத்தப்பட்ட கப்பல் எந்த நாட்டைச்சேர்ந்ததோ அந்த நாட்டின் கடற்படை கப்பல்கள் மூலமாக பெற்றுக்கொள்வோம்.

அதற்கு குறைவான தொகையாய் இருந்தால், வேறு முறைகளில் பெற்றுக்கொள்வோம், உதாரணத்துக்கு ஹவாலா போன்றவை.

பெற்ற பணத்தை எப்படி பிரித்து கொள்வீர்கள்?

கப்பலை பிடித்தவர்கள் 50 சதவீதமும், இந்த கடத்தலுக்கு பொருளாதார உதவி புரிந்தவர்கள் 40 சதவீதமும், கப்பலை பாதுகாப்பது மற்றும் பேரம் பேசுவதற்கு உதவியவர்கள் 10 சதவிதமும் எடுத்துக்கொள்வார்கள்.
கப்பலின் உரிமையாளர் பணம் கொடுக்க மறுத்துவிட்டால்?

இதற்கு இரு வழிகளை கையாள்வோம். ஒன்று அந்த கப்பலில் உள்ளவர்களை, கேப்டனையும் சேர்த்து, கரைகளுக்கு அழைத்துச்  சென்று, நாங்கள் கேட்ட
பணம் கிடைக்கும் வரை வைத்திருப்போம்.

இல்லையென்றால் கப்பலில் உள்ளவர்களை விடுவித்துவிட்டு அந்த கப்பலை வேறு கப்பல்களை கடத்துவதற்கு பயன்படுத்திக்கொள்வோம்.

உங்களுக்கு யார் பண உதவிகளை செய்வது?

குறிப்பிடும்படி யாரும் கிடையாது. எங்களுக்குள் பல பிரிவுகள் (Umbrella Groups)  உள்ளது. ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வோம்.

நீங்கள் எங்கிருந்து ஆயுதங்கள் வாங்குகிறீர்கள்?

சோமாலியாவிலேயே எல்லா நாட்டு ஆயுதங்களும் கிடைக்கும். பெரும்பாலும் நாங்கள் பக்கத்திலிருக்கும் நாடுகளில் இருக்கும், சட்டவிரோதமாக
செயல்படும் ஆயுத வியாபாரிகளிடம் இருந்து வாங்குவோம்.

குறிப்பாக எந்த நாடு?

ஏமன்.

நீங்கள் சந்தித்த பெரிய ஆபத்தான சூழ்நிலை என்ன ?

ஒரு முறை நாங்கள் ஒன்பது பேர் ஒரு படகில் சோமாலிய கடற்கரையில் இருந்து 1000 மைல் தாண்டி சுமார் ஒரு மாதம் மூன்று நாட்களுக்கு மேலாக சென்றிருந்தோம். ஒன்றும் கிடைக்காததால் திரும்பி வந்துக்கொண்டிருந்தோம்.

சோமாலிய கடற்கரையிலிருந்து சுமார் 120௦ மைல் தூரத்தில் வந்துக்கொண்டிருக்கையில், கடலில் ஒரே புகைமண்டலம், பறவைகளின்  காட்டு கூச்சல் வேறு. கடல்நீரில் ஒரு வித மாற்றம், திடீரென்று எங்கள் படகு கடலில் பாதியளவு மூழ்கிவிட்டது, ஒருவரை தவிர அனைவரும் 
கடலில் விழுந்து விட்டோம், அந்த ஒருவர் தான் எங்களை காப்பாற்றினார்.

பிறகுதான் தெரிந்தது, அந்த புகைமண்டலம், விஷக்கழிவுகளை ஒரு கப்பல் அப்போது கொட்டிச்சென்றதால் ஏற்பட்டது என்று.

இங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள கடற்படை கப்பல்களை எப்படி சமாளிக்கிறீர்கள்?

அவர்கள் இங்கே சண்டைப் போடத்தான் இருக்கிறார்கள், அதனால் நாங்கள் எப்போதும் சண்டைக்கு தயாராக இருப்போம். 

அவர்களை நாங்கள் நடுக்கடலில் சந்தித்தால், எங்களில் சிலர் ஆயுதங்களை கடலில் எறிந்து விட்டு, தாங்கள் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தவர்கள் (illegal immigrants) என்று சொல்லுவார்கள்.

வேறு சிலரோ அவர்களுடன் சண்டை புரிவார்கள், மற்றவர்களோ தப்பித்து ஓடுவார்கள். மூன்று படகு சென்றால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் தப்பித்து செல்லும். கடற்படை ஒன்றை துரத்த மற்ற இரண்டும் தப்பித்துவிடும்.
       

உங்களுக்கென்று தலைவர்கள் யாராவது இருக்கிறார்களா? நீங்கள் ஒருவருக்கொருவர் எப்படி ஒத்துழைத்து கொள்கிறீர்கள்?

நாங்கள் பல பிரிவுகளை சார்ந்தவர்கள், ஆனால் அனைவரும் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து கொள்வோம். குறிப்பாக சொல்லப் போனால் இரு பிரிவுகள் இருக்கின்றன. ஒன்று பண்ட்லாண்டிலும் (Puntland) மற்றொன்று தெற்கு மற்றும் மத்திய சோமாலியாவிலும் இருக்கின்றன. நான் முதலாவது பிரிவைச் சேர்ந்தவன்.

நாங்கள் ஒருவரையொருவர் மதிக்கிறோம், நல்ல தொடர்பு வைத்திருக்கிறோம். உதாரணத்துக்கு எங்களில் ஒரு பிரிவு ஒரு கப்பலை கடத்தி பணம் பெற்றால் அதை மற்றொரு பிரிவுக்கும் பகிர்ந்தளித்து விடுவோம்.

சோமாலியாவின் அருகிலுள்ள துறைமுகங்களில் உங்களுக்கு உளவு சொல்ல உளவாளிகள் இருக்கிறார்களா?

இல்லை. அப்படி யாரும் கிடையாது.

இது எப்போது முடிவுக்கு வரும்?

சோமாலியாவில் சட்டஒழுங்கு சீர்ப்படும்போதும், உண்மையிலேயே இந்த உலகம் எங்கள் கடற்பகுதிகளை காக்க நினைக்கும்போதும், விஷக்கழிவுகள் கொட்டப்படுவது நிறுத்தப்படும்போதும் எங்கள் செயல்கள் முடிவுக்கு வந்துவிடும்.  எங்கள் நாட்டில் உள்ள சர்வதேச கடற்ப்படை கப்பல்களும் இங்கிருந்து வெளியேற வேண்டும். இவையெல்லாம் நடக்காவிட்டால் எங்கள் செயல்கள் தொடரத்தான் செய்யும்.                                            

நான் சொல்ல வருவது, ஒரு பக்கம் எங்கள் கடற்பகுதிகளை சீரழித்து 
விட்டு, மறுபக்கம் தரைப்பகுதியில் அமைதி கொண்டு வருவதாக நாடகமாடக் கூடாது என்பதுதான்.

சோமாலிய கடல் பகுதி மிகப் பெரியது, அதில் ஒருபுறம் விஷக் கழிவுகளையும், அணுக்கழிவுகளையும் கொட்டி கடலையும் மக்களையும் நாசமாக்கும் கொடுமை, மறுபுறமோ கிடைத்த மீன்களையெல்லாம் கொள்ளையடிக்கும் கும்பல். இந்த சூழ்நிலை தான் இவர்களை ஆயுதமேந்த வைத்திருக்கிறது. 

அமைதி ஏற்ப்படுத்துவதாக உள்ளே நுழைந்து உள்நாட்டு கலவரத்தை தூண்டிவிட்டு குளிர்க்காயும் சில நாடுகள் ஒருபுறம், தங்கள் வாழ்வாதாரமான கடலை அழித்துக் கொண்டிருக்கும் மனிதநேயமற்ற செயல்கள் மறுபுறம், நடுவில் சோமாலிய மக்கள்...
நினைக்கும் போதே நெஞ்சம் தடுமாறுகிறது. 

இன்னும் எவ்வளவு காலம் தான், பிரச்சினைகள் எங்கிருந்து ஆரம்பிக்கின்றன என்று பார்த்து அதை தீர்க்காமல், பிரச்சனைகளிலேயே கவனம் செலுத்த போகிறதோ உலகம்?   

குற்றவாளிகள் உருவாகுவதில்லை, உருவாக்கப்படுகிறார்கள் என்று யாரோ சொன்னதாக ஞாபகம்...

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.
ஆஷிக் அஹ்மத்.